செய்திகள்

கோவையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 8 கிலோ தங்க கட்டி சிக்கியது

Published On 2018-09-18 04:10 GMT   |   Update On 2018-09-18 06:37 GMT
கோவையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். #ChennaiAirport #GoldBarsSeized
ஆலந்தூர்:

வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 5 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் 8 கிலோ தங்க கட்டி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் 5 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட தயாரானது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விமானத்தின் கழிவறையில் 8 கிலோ தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.2½ கோடியாகும். தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இந்த விமானம் ஏற்கனவே துபாயில் இருந்து சென்னை வந்து இருந்தது. பின்னர் டெல்லிக்கும், கோவைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை வந்தபோது தான் தங்கம் பிடிபட்டுள்ளது.

எனவே துபாயில் இருந்து வந்தபோதே அதில் தங்கம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். சோதனைக்கு பயந்து கடத்தல்காரர்கள் தங்க கட்டியை விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

எனினும் மற்ற நகரங்களுக்கு விமானம் புறப்படும் போது விமானத்தின் கழிவறையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது தங்க கட்டியை கவனிக்காதது எப்படி? கடத்தல் கும்பலுடன் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் விவரத்தை சேகரித்துள்ளனர். இதில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #ChennaiAirport #GoldBarsSeized
Tags:    

Similar News