தமிழ்நாடு செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

Published On 2026-01-17 19:15 IST   |   Update On 2026-01-17 19:17:00 IST
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
  • 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகள் நடைபெற்றது.

இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.

இதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான 2வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காளைக்கான 3வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News