செய்திகள்

ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் என்று கூறி பல கோடி ரூபாய் மோசடி

Published On 2018-09-17 16:32 GMT   |   Update On 2018-09-17 16:32 GMT
சேலம் -02 ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் என்று கூறி பல கோடி ரூபாய் மோசடி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை; 2 பேர் தீக்குளிக்க முயற்சி பதட்டம்-போலீஸ் குவிப்பு
சேலம்:

சேலம் காந்தி ரோட்டில் ஜி.மார்ட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருபவர் கிருபாகரன் (வயது 35).

இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கட்டினால் மோட்டார் சைக்கிள் தருவதாகவும், மேலும் பணம் கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் விளம்பரம் செய்தார். மேலும் பல கவர்ச்சிக்கரமான சலுகைகளையும் அறிவித்தார்.

இதை நம்பி சேலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கிருபாகரன் நிறுவனத்திற்கு வந்து பணத்தை கட்டினர். இதன் மூலம் அவருக்கு பல கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிகிறது.

பணம் கட்டியவர்களிடம் தற்போது மோட்டார் சைக்கிள் அனைத்தும் தீர்ந்து விட்டது. அடுத்ததாக மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் வந்ததும் உங்களுக்கு தருகிறேன் எனக் கூறி அவர்களை கிருபாகரன் அனுப்பி வைத்தார்.

பல நாட்கள் ஆகியும் மோட்டார் சைக்கிள் கொடுத்ததாக தெரிய வில்லை. தொடர்ந்து அவரிடம் சென்று கேட்கும் போதெல்லாம் இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

இதனால், பணம் கட்டியவர்கள் கன்னங்குறிச்சி பகுதிக்கு போகிற வழியில் உள்ள கிருபாகரன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடம், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கூறி முறையிட்டனர். அதற்கு அவர், வீட்டையும், நகைகளையும் விற்று உங்களுடைய பணத்தை தான் தருவதாக கூறினார்.

இந்த நிலையில் கிருபாகரன், காந்தி ரோட்டில் உள்ள தனது நிறுவனத்தை திடீரென மூடிவிட்டு, வீட்டையும் பூட்டி விட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்டார்.

அவரிடம் பணம் கட்டியவர்கள் இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, கிருபாகரன் ஓடி விட்டாரே? என்ன செய்வது? என அழுது புலம்பினர்.

இது பற்றி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார், கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. 5 பேர் மட்டுமே செல்லுமாறு கூறினார்கள்.

இதனால் கலெக்டர் அலுவலக மெயின் கேட்டை முற்றுகையிட்டு எங்களை அனுமதியுங்கள்.. அனுமதியுங்கள் என கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அப்போது மேச்சேரி பகுதியை சேர்ந்த தனபால் (30), கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் தற்கொலை செய்வதற்காக கையில் கொண்டு வந்த மண்எண்ணையை தலையில் மளமளவென ஊற்றினார்கள்.

இதை பார்த்த அங்கிருந்த போலீசார், உடனடியாக ஓடி வந்து 2 பேரையும் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் வேனில் ஏற்றி விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடங்கு அங்கு மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News