செய்திகள்

பெட்ரோல்-டீசல் மீதான ‘வாட்’ வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை

Published On 2018-09-14 05:43 GMT   |   Update On 2018-09-14 05:43 GMT
தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #petroldiesel

சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பெட்ரோல் லிட்டர் 85 ரூபாயையும், டீசல் லிட்டர் 75 ரூபாயையும் எட்டுகிறது.

இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கூலி வேலை செய்யக் கூடியவர்கள், தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறக் கூடியவர்கள், சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் மாத வருவாயில் ‘துண்டு’ விழுகிறது.

கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை எட்டும் நிலைக்கு வந்துவிட்டது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது:-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சாதாரண ஏழை மக்களை இது கடுமையாக பாதித்து வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் பெட்ரோல்-டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் சிரமத்திற்கு ஆளாவதை பார்த்த ஆந்திர அரசு மாநில அரசு விதித்த வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல்-டீசல் விலை குறைந்துள்ளது. அதுபோல தமிழக அரசும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி வரியை குறைத்தால் பெரும் சுமையில் இருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை தொடர்ந்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாட் வரி குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார். #petroldiesel 

Tags:    

Similar News