செய்திகள்

புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு கலைஞர் பெயர்- நாராயணசாமிக்கு முக ஸ்டாலின் நன்றி

Published On 2018-09-11 09:18 GMT   |   Update On 2018-09-11 09:18 GMT
புதுச்சேரியில் 2 சாலைகளுக்கு டாக்டர் கலைஞர் என்ற பெயர் சூட்டப்படும் என அறிவித்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
சென்னை:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல் வாழ்விற்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுவைக்கு, முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து பாடுபட்ட தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில், புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு, தலைவர் கலைஞரின் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ள தங்களுக்கும் தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள அன்னை இந்திரா காந்தி சிலை இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால்- திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் “டாக்டர் கலைஞர்” பெயர் சூட்டப்படும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும், தி.மு.க.வின் சார்பில், பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேவேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கப் போவதுமான, இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க. என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும், தலைவர் கலைஞரின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.

தலைவர் கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்க இயலாத இடத்தை புதுச்சேரி பெற்று இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். #DMK #MKStalin #Narayanasamy
Tags:    

Similar News