செய்திகள்

மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறி- 2 பேர் கைது

Published On 2018-09-10 20:48 IST   |   Update On 2018-09-10 20:48:00 IST
கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை விளாச்சேரி அருகே உள்ள மொட்ட மலையைச் சேர்ந்தவர் மல்கர்பாஷா (வயது 46). இவர் முறுக்கு, மிட்டாய் ரகங்களை பல்வேறு கடைகளுக்கும் வினியோகித்து வருகிறார்.

இரு சக்கர வாகனத்தில் சரக்குகளை மதுரையின் பல பகுதிகளுக்கும் வினியோகித்து விட்டு மல்கர் பாஷா ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் வழி மறித்தனர்.

அவர்கள் கத்தியை காட்டி, வியாபாரி மல்கர் பாஷாவை மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்து 1,470 ரூபாயை பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருநகர் திரு மலைச்செல்வன் (21), பாலமுருகன் (21) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காரியாபட்டி மந்திரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (24), பழனி (25) ஆகியோர் திருமங்கலம் 4 வழிச்சாலையில் வெள்ளரி வியாபாரம் செய்து வருகின்றனர்.

2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ள நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் பழனி கம்பால் தாக்கியதில் பிரபு காயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபு கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி பழனியை கைது செய்தனர்.

Tags:    

Similar News