செய்திகள்

இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் அமமுக-வுடன் இணைய தயாரா?: தங்க தமிழ்செல்வன் சவால்

Published On 2018-09-08 10:45 IST   |   Update On 2018-09-08 10:45:00 IST
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் அ.ம.மு.க.வுடன் இணைய தயாரா? என்று தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து அதன் பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும்.


ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானதே. எங்கள்மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் இதுவரை ஓ.பி.எஸ்.ஐ. அழைத்து விசாரணை செய்யாதது ஏன்? இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது.

குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
Tags:    

Similar News