செய்திகள்

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - திருநாவுக்கரசர் ஆதரவாளர்களிடையே மோதல்

Published On 2018-09-04 14:33 IST   |   Update On 2018-09-04 14:33:00 IST
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan
சென்னை:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.



தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கிய இந்த  கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் அங்கு திரண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்களையும் மேடையில் பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் சூழல் நிலவியதால் மேடையில் இருந்து இறங்கிவந்த திருநாவுக்கரசர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan #SathyamurthyBhavan
Tags:    

Similar News