செய்திகள்

விக்கிரவாண்டி அருகே வியாபாரிக்கு கத்தி குத்து- 2 பேர் கைது

Published On 2018-09-03 11:48 GMT   |   Update On 2018-09-03 11:48 GMT
விக்கிரவாண்டி அருகே கடை முன்பு மது குடித்ததை தட்டிகேட்ட வியாபாரிக்கு கத்தி குத்து விழுந்தது. இது குறித்து புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

வழக்கம்போல் செந்தில்குமார் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பழையகருவாச்சி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (28) மற்றும் அவரது தம்பி அன்பழகன் (27) ஆகிய 2 பேரும் வந்தனர்.

செந்தில்குமாரிடம் குளிர்பானம் வாங்கினர். பின்னர் கடையின் முன்பு அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த மதுவை குடிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த செந்தில்குமார், இங்கு அமர்ந்து மது குடிக்காதீர்கள் என்று அவர்களிடம் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்பழகன் தனது கையில் வைத்திருந்த கத்தியால், செந்தில்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே சிலம்பரசனும், அன்பழகனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் செந்தில்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், அன்பழகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News