செய்திகள்

எந்த முறையில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - முதல்வர் பழனிசாமி

Published On 2018-08-31 18:44 GMT   |   Update On 2018-08-31 18:44 GMT
2021-ம் ஆண்டு வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், எந்த முறையில் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #EdappadiPalaniswami
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- முதுகெலும்பில்லாத ஆட்சி, ஊழல் ஆட்சி என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டுவது குறித்து...

பதில்:- அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை நாம் எட்டியிருக்கின்றோம். வேண்டுமென்று திட்டமிட்டு, இந்த அரசின் மீது வீண்பழி சுமத்துவதற்காக, அரசியல் காரணத்திற்காக, அவர்கள் இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். மாணவச் சமுதாயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து இருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதியை பொறுத்தவரைக்கும், இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரியாக சுகாதாரத்துறை விளங்கி கொண்டிருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு துறையிலும் நாம் முத்திரையை பதித்திருக்கின்றோம்.

கேள்வி:- முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?


பதில்:- பருவ காலங்களிலே பெய்கின்ற மழை நீரை முல்லைப் பெரியாறு அணை கேட்ச்மெண்ட் பகுதியில் வருகின்ற நீரை முல்லைப் பெரியாறு அணையிலே தேக்கி வைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக, 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்காக அணை பலப்படுத்துகின்ற பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதை அவர்கள் திட்டமிட்டு, அந்த 142 அடியிலிருந்து 152 அடி உயர்த்தக்கூடாது என்பதற்காக தற்போது கேரள பகுதியிலே கனமழையின் காரணமாக அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உபரி நீராக வெளி வந்த காரணத்தினால் கேரளாவிலே வெள்ளம் ஏற்பட்டது. அதை வைத்துக் கொண்டு, தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில்லை.

வெள்ளம் ஏற்கனவே சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான், ஒரு வாரத்திற்கு பிறகு தான், முல்லைப் பெரியாறு அணை நிரம்பி, அந்த முல்லைப் பெரியாறு அணை நிரம்பியவுடன் பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்ட பிறகு தான், படிப்படியாக நீர் விடப்பட்டது. நாம் 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தக்கூடாது என்ற அடிப்படையிலே இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். கோர்ட்டை அவர்கள் நாடி இருக்கின்றார்கள். கோர்ட்டில் நம்முடைய நியாயமான கருத்துகளை ஆணித்தரமான கருத்துகளை ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலே நம்முடைய வாதங்களை எடுத்து வைக்க இருக்கின்றோம்.

கேள்வி:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலே தேர்தல் வைக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறதே?.

பதில்:- ஒரே நேரத்திலே தேர்தல் வைப்பது பொறுத்தவரைக்கும், 2021-ம் ஆண்டு வரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். நம்முடைய கருத்தை தெரிவித்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டுமென்று என்பதற்கு தேவையான கருத்துறு எட்டப்படவில்லை என்று தான் கருதுகின்றேன். ஆகவே, எந்த முறையில் தேர்தல் வந்தாலும், நாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

கேள்வி:- தேர்தல் வாக்குசீட்டு முறையை நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?

பதில்:- வாக்குசீட்டு முறை வந்தாலும் சரி, ஏற்கனவே இருக்கின்ற மின்னணு மூலமாக வாக்களிக்கின்ற முறையாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரைக்கும், எதிலும் சந்தேகம் கிடையாது. மக்கள் எஜமானர்கள். மக்கள் நீதி வழங்குவார்கள். அவர்களுடைய நீதியை தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோமே தவிர, வாக்குசீட்டோ, மின்னணு மூலமாகவோ, எந்த தவறும் நடைபெறுவதாக எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எது இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார். #EdappadiPalaniswami
Tags:    

Similar News