செய்திகள்

பெசன்ட்நகரில் கடலில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

Published On 2018-08-29 21:46 GMT   |   Update On 2018-08-29 21:46 GMT
பெசன்ட்நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கடலில் மூழ்கி நேற்று பலியாகினர்.
அடையாறு:

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள சென்னை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 17), விக்னேஷ் (20) ஆகியோர் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் நேற்று மாலை பெசன்ட் நகர் வந்தனர்.

நண்பர்களுடன் அவர்கள் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது, சதீஷ், விக்னேஷ் ஆகியோர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

உடனே அங்கு இருந்த சிலர் கடலில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்து விட்டனர்.

தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் தற்போது திருவிழா நடந்து வருவதால், வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கடலில் குளிப்பவர்களை கட்டுப்படுத்துவதுடன், கண்காணிப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News