செய்திகள்

சென்னை விமானத்தில் ஷு - சூட்கேசில் மறைத்து கடத்திய 1 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2018-08-29 08:56 GMT   |   Update On 2018-08-29 08:56 GMT
சென்னை விமானத்தில் ஷு மற்றும் சூட்கேசில் மறைத்து கடத்திய 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Goldsmuggling

ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மத்கானின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அவர் அணிந்து இருந்த ‘ஷு’வை பிரித்து பார்த்த போது ½ கிலோ தங்க கட்டியை வட்டமாக மாற்றி அதில் வெள்ளி மூலாம் பூசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல பக்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கேரளாவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சூட்கேசில் பார்சலாக மறைத்து ½ கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பயணிகளிடமும் மொத்தம் 1.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.33½ லட்சம் ஆகும். தங்க கடத்தல் தொடர்பாக அஸ்மத்கான், பிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடையில் கட்டுகட்டாக அபிதாபி நாட்டு கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News