செய்திகள்

ரூ.15 லட்சம் கட்டணம் பாக்கி- கடலூர் கலெக்டர் அலுவகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

Published On 2018-08-28 10:19 GMT   |   Update On 2018-08-28 10:19 GMT
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி உள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதானால் பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர்:

கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.

அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.

மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News