செய்திகள்

பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மரியாதை

Published On 2018-08-28 14:29 IST   |   Update On 2018-08-28 14:29:00 IST
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் சென்னையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
சென்னை:

சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார்.

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு பதவியேற்றார். கடந்த 7-8-2018 அன்று அவரது உயிர் பிரியும் வரை அக்கட்சியின் தலைவராக நீடித்தார்.

கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவராக தொண்டர்களிடையே இன்று முதன்முறையாக எழுச்சி உரையாற்றினார்.



பின்னர், பிற்பகலில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின் தந்தை பெரியாரின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற அவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில்  மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.  #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
Tags:    

Similar News