செய்திகள்

செந்துறை அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை

Published On 2018-08-27 13:42 GMT   |   Update On 2018-08-27 13:42 GMT
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.எஸ்மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெருமாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன்கள் தமிழ்அரசன் (வயது32), தமிழ்செல்வன் (27). இந்த நிலையில் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக வசந்தா என்பவரை சிற்றரசு திருமணம் செய்தார்.

தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தமிழ்அரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்அரசனுக்கு திருமணம் நடைபெற்றது. அண்ணன் திருமணத்திற்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் தமிழ்செல்வன் சிலரிடம்  கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வசந்தா, திருமணத்திற்கு வந்த நகைகளில் தனக்கு தாலி செயின் ஒன்று வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினாராம். இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தமிழ்செல்வன் நேற்று அங்குள்ள தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்அரசன், வசந்தாவிடம் சென்று எனது தம்பி சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உறவினர் வினோத் என்பவர் தடுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தமிழ்அரசன், வினோத்தை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தமிழ்செல்வன் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News