செய்திகள்

தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-08-26 13:55 GMT   |   Update On 2018-08-26 13:55 GMT
தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தா.பேட்டை:

தா.பேட்டை ஒன்றியம் வாளவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி, மேலதொட்டியப்பட்டி, நடுப்பட்டி, களத்துப்பட்டி, கம்பளிப்பட்டி, கோமாளியூர், கீழதொட்டியப்பட்டி, சித்திரபட்டி உள்ளிட்ட பகுதி கிராமங்களில் பல வருடங்களாக காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராடி வருகின்றனர். 

இந்த நிலையில் இப்பகுதி கிராமங்களில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.

இதையடுத்து தொட்டியப்பட்டி பகுதி பொதுமக்கள் வாளவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்விநாயகம், இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

விரைவில் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News