செய்திகள்

வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபருக்கு அடி-உதை

Published On 2018-08-24 12:44 GMT   |   Update On 2018-08-24 12:44 GMT
வேலூர் தோட்டப்பாளையத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்:

வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags:    

Similar News