செய்திகள்

அன்னூரில் பட்ட பகலில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் தங்க நகைகள் திருட்டு

Published On 2018-08-24 15:24 IST   |   Update On 2018-08-24 15:24:00 IST
அன்னூரில் பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). கைத்தறி தொழிலாளி.

சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மகள் திருமண சம்பந்தமாக ஜோதிடரை பார்க்கச் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கனகராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த ஆரம், செயின் உள்பட 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கனகராஜ் அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். பட்டபகலில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News