செய்திகள்
மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜரான திருமுருகன் காந்தியை வேலூருக்கு போலீசார் வேனில் அழைத்து சென்ற காட்சி

மயிலாடுதுறை கோர்ட்டில் திருமுருகன் காந்தி ஆஜர்- செப்.6-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2018-08-24 05:17 GMT   |   Update On 2018-08-24 05:17 GMT
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மயிலாடுதுறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #ThirumuruganGandhi
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னபெருந்தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு தரப்பினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சீர்காழி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி ,சீர்காழி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு நீதிபதி விடுப்பில் இருந்ததால் உடனடியாக மயிலாடுதுறை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து திருமுருகன் காந்தி மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #ThirumuruganGandhi
Tags:    

Similar News