செய்திகள்

உணவுப் பொருட்களை வாங்க பாத்திரம் கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி- ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

Published On 2018-08-21 06:06 GMT   |   Update On 2018-08-21 06:06 GMT
ஓட்டலுக்கு உணவு பொருட்களை வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hotels
சென்னை:

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து பிளாஸ்டிக் பைகள், கப் போன்றவற்றின் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்கவும், வியாபாரிகள் விற்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஓட்டலில் உணவு வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

ஓட்டல்களில் உணவு பார்சலுக்காக 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை செலவு செய்கிறோம். வாடிக்கையாளர்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாத்திரங்களை கொண்டு வந்தால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்க தயாராக இருக்கிறோம். இதுபற்றி அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு சென்னை ஓட்டல்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக உணவுகளை பார்சல் செய்ய மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அலுமினிய படலம் கொண்ட காகிதங்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாழை இலை மற்றும் தையல் இலைகளை சில ஓட்டல்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக காட்போர்டு அட்டைகளை பயன்படுத்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Hotels #PlasticBan
Tags:    

Similar News