செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும்- அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு

Published On 2018-08-20 10:45 IST   |   Update On 2018-08-20 10:45:00 IST
மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்ப‌ட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.



முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்ப‌ட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டு உள்ளது.

நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
Tags:    

Similar News