செய்திகள்

ஈரோடு - பவானியில் காவிரி வெள்ள சேதங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்

Published On 2018-08-19 06:22 GMT   |   Update On 2018-08-19 06:25 GMT
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #EdappadiPalaniswami #Cauveryflood

ஈரோடு:

இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி ஆற்றில் வரலா காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்படுகிறது.

காவிரி வெள்ளத்துடன் பவானி சாகர் அணையில் திறக்கப்படும் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் காவிரி வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் சீற்றத்தால் சத்தியமங்கலத்தில் 300 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 400 வீடுகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதேபோல் பவானி நகரமும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சின்னாற்றுப்பாலம், மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு இடங்களில் 550 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்கி உள்ளனர்.

இதேபோல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் 50 வீடுகளிலும் கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளில் 250 வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார்.

 


அங்குள்ள கல்யாண மண்டப முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

தொடர்ந்து பவானி- குமாரபாளையம் பழைய காவிரி ஆற்று பாலத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.

பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மீண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் வந்த முதல்- அமைச்சர் அங்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி சென்றனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News