செய்திகள்

அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்- கலெக்டர் பேச்சு

Published On 2018-08-18 16:13 GMT   |   Update On 2018-08-18 16:13 GMT
அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியுள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில் பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ்வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட்ட  வளர்ச்சிப்பணிகள் குறித்தும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது. 

ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, தெரு விளக்குகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்டபயனாளிகள், வீட்டுகட்டும் திட்ட பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பேசுகையில், தங்கள் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டவைகளை இது போன்ற கிராம சபை கூட்டங்கள் மூலமாக தீர்மானம் நிறைவேற்றி அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைவதற்காக, வேலை வாய்ப்பு பெறும் வகையில் பெண்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகும். இதன் மூலம் பெண்களை சார்ந்திருக்கும் குடும்பம் பொருளாதார வகையில் முன்னேற்றம் அடையலாம். அரசின் திட்டங்களை முழு மையாக பெண்கள் பயன் படுத்திக் கொண்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஆர்டிஓ விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சேகர், முரளிதரன், தாசில்தார் பாரதிவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News