செய்திகள்

திருச்சியில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி- மு.க.ஸ்டாலின்-ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

Published On 2018-08-17 11:35 GMT   |   Update On 2018-08-17 11:35 GMT
திருச்சியில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின்- ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர். #mkstalin

திருச்சி:

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் தி.மு.க. சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் முக்கிய இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

முதல் நிகழ்ச்சியாக திருச்சியில் இன்று ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்  நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் ஊடகத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். இன்று மாலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற தலைப்பிலும், ‘மறக்க முடியுமா கலைஞர்’ என்ற தலைப்பில் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரியிலும், ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் 26-ந்தேதி நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளி திடலிலும், ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் சென்னையில் வருகிற 30-ந்தேதியும் புகழஞ்சலி கூட்டங்கள் நடக்கிறது. #mkstalin

Tags:    

Similar News