செய்திகள்

காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 2352 மதுபாட்டில்கள் வலங்கைமான் பகுதியில் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2018-08-17 10:26 GMT   |   Update On 2018-08-17 10:26 GMT
காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 2352 மதுபாட்டில்கள் வலங்கைமான் பகுதியில் பறிமுதல். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு வலங்கைமான் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் வலங்கைமான் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 40) என்பவரது வீட்டிலும், சத்தியமூர்த்தி (49) என்பவரது வீட்டிலும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 48 மதுபாட்டில்கள் அடங்கிய 49 பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 2352 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதையடுத்து மதுபாட்டில்களையும், அதை கொண்டு வர பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்த ரமேஷ்குமார். சத்தியமூர்த்தி, மற்றும் சரக்கு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (41) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News