செய்திகள்
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி நடந்த காட்சி.

தி.மு.க.வை வழி நடத்த ஸ்டாலின் தான் வரவேண்டும்- முன்னாள் அமைச்சர் துரைமுருகன்

Published On 2018-08-13 06:55 GMT   |   Update On 2018-08-13 06:55 GMT
கருணாநிதியை இழந்து வாடும் தி.மு.க. தொண்டர்களையும், கட்சியையும் செயல் தலைவர் ஸ்டாலினே வழி நடத்த வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசினார். #DMK #Karunanidhi #DuraiMurugan #MKStalin
வேலூர்:

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேலூரில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடந்தது.

பேரணியில் தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் எம்.பி முகமதுசகி, எம்.எல். ஏக்கள் காந்தி, நந்தகுமார், கார்த்திகேயன், நல்ல தம்பி உள்பட கலந்து கொண்டனர்.

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. மாநகர அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டு போனதாக கருதுகிறேன். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருக்கு முன்பு நான் இறப்பேன் என நினைத்தேன். ஆனால் என்னை அவர் முந்திக் கொண்டு சென்றுவிட்டார்.

என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. (அப்போது அவர் மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழுதார். உடன் அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.)

எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருதுகளை கருணாநிதி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு நாங்கள் அந்த விருதை கேட்பதைவிட தோழமை கட்சிகள் கேட்பதே சிறந்தது. இதற்கு மத்திய அரசு மனசு வைக்க வேண்டும்.

கருணாநிதியின் உடல் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் ஊட்டிய உணர்வு சொல்லிக் கொடுத்த சுயமரியாதை கருத்துக்கள், தமிழுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள், எல்லாவற்றுக்கும் மேலாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை.


கருணாநிதியை இழந்து வாடும் தி.மு.க. தொண்டர்களையும், கட்சியையும் செயல் தலைவர் ஸ்டாலினே வழி நடத்த வரவேண்டும். அதற்கு தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

அமைதி பேரணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். #DMK #Karunanidhi #DuraiMurugan #MKStalin

Tags:    

Similar News