செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்

Published On 2018-08-11 16:20 GMT   |   Update On 2018-08-11 16:20 GMT
ஆட்டோ டிரைவர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கியதால், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

இரணியல் அருகே மேற்கு நெய்யூரைச் சேர்ந்தவர் ரூபன்டேனி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்தார். கடந்த மாதம் 14-ந்தேதி சவாரிக்கு சென்ற ரூபன்டேனி மாயமானார். இது குறித்து அவரது தந்தை சுந்தர்ராஜ் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரூபன்டேனியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரூபன் டேனி கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டு இருப்பதாக தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ரூபன் டேனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலை வழக்கில் ரூபன்டேனியின் நண்பர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட பிரபல ரவுடி மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது.

பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் கூறுகையில், கடந்த மாதம் ரூபன்டேனியை சவாரிக்காக அழைத்துச் சென்றோம். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினோம். பின்னர் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரூபன்டேனியை வீசிச் சென்றோம் என்றனர். இவர்கள் 3 பேரும் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையடுத்து கடந்த மாதம் இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணம் கிடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணம் கிடந்ததாக கூறி பறக்கின்கால்மடம் பகுதியில் புதைத்ததாக கூறினார்கள். எனவே புதைக்கப்பட்ட வாலிபர் ரூபன்டேனியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரூபன்டேனி ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News