செய்திகள்

விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் கவர்னருடன் ஒத்துழைக்க தயார்- முதல்வர் நாராயணசாமி

Published On 2018-08-11 13:27 IST   |   Update On 2018-08-11 13:27:00 IST
விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அரசு அதிகாரிகள் கவர்னரின் டுவிட்டர் உத்தரவுகளுக்கு பணிந்து செயல்பட வேண்டும் என அவசியமில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதற்கு கவர்னர் எனக்கு டுவிட்டரிலேயே பதில் அளித்திருந்தார்.

மறுநாள் கவர்னக்கு நான் கடிதம் அனுப்பினேன். இந்தக் கடிதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன். டெல்லி அரசு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

புதுவை மாநிலத்துக்கு டெல்லியை விட கூடுதல் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளிக்கும் ஆலோசனையின் படியே கவர்னர் செயல்பட வேண்டும்.


கடந்த 2 ஆண்டுகளில் புதுவை மக்களுக்கு கவர்னர் என்ன செய்துள்ளார்? இலவச அரிசி போடுவதை தடுத்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கடமை. இதனை தடுக்கும் வகையிலேயே கடந்த 2 ஆண்டுகளாக கவர்னர் செயல்பட்டுள்ளார். விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட்டால் அவருடன் ஒத்துழைக்க தயாராகவே உள்ளேன்.

புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கூடுதலாக 240 இடங்கள பெற்றுள்ளோம். சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகே‌ஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவில் கூடுதல் இடம் கிடைத்துள்ளது.

இந்த இடங்களுக்கு மாணவர்களை சென்டாக் மூலம் சுயநிதி அடிப்படையில் சேர்க்க இருக்கிறோம். இதனால் கல்லூரிக்கு கூடுதலாக நிதி கிடைக்கும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செயல்பட முடியும்.

மேலும் பொறியியல் பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 20 இடங்களை பெற்றுள்ளோம்.

இந்த இடங்களையும் சுயநிதி அடிப்படையிலேயே சேர்க்க உள்ளோம். கால்நடை மருத்துவ கல்லூரியையும் விவசாய கல்லூரியையும் இணைந்து விவசாய பல்கலைக்கழக அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryGovernor #Kiranbedi #PuducherryCM #Narayanasamy
Tags:    

Similar News