செய்திகள்

பள்ளிக்கூட மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணிகள் நவம்பருக்குள் வழங்கப்படும் - அதிகாரி தகவல்

Published On 2018-08-10 03:50 GMT   |   Update On 2018-08-10 03:50 GMT
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, காலணிகள் நவம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக அனைத்து பொருட்களும் விலை இன்றி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.



ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டவுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து புத்தகப்பை, காலணி, கலர் பென்சில் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.

6, 9, 10-வது படிக்கும் 16 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெண்ட்ரி பாக்ஸ், 3-வது முதல் 5-வது வரை படிக்கும் 15 லட்சத்து 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலர் பென்சில், 1-வது முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 72 லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, 1-வது முதல் 10-வது வரை படிக்கும் 58 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என சென்னை டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News