செய்திகள்

ஓடும் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி

Published On 2018-08-09 19:42 IST   |   Update On 2018-08-09 19:42:00 IST
ஓடும் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

கர்நாடக மாநிலம் பெங்களூர் டாக்டர் சிவராம்நகரை சேர்ந்தவர் தாமஸ் (வயது 64). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு இருதய பாதிப்பு இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தாமஸ் கேரள மாநிலம் ஆலப்புலாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாதந்தோறும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் தாமஸ் தனது மனைவியுடன் ஆலப்புலாவுக்கு சென்றார். சிகிச்சை முடிந்ததும் நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

ஆலப்புலாவில் இருந்து எஸ்வந்பூர் நோக்கி சென்ற ரெயிலில் எஸ். 7 பெட்டியில் ஏறினார். ரெயில் இன்று அதிகாலை கோவை அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தாமசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து ரெயில்வே டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் கோவை ரெயில்நிலையத்துக்கு வந்ததும் டாக்டர் ரெயில் பெட்டிக்கு சென்று சோதனை செய்தார்.

அப்போது தாமஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாமஸ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News