செய்திகள்

எனக்கு தந்தை போன்றவர் - கருணாநிதி மறைவுக்கு சோனியாகாந்தி இரங்கல்

Published On 2018-08-09 02:46 IST   |   Update On 2018-08-09 02:46:00 IST
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர்’ என்று கூறி உள்ளார். #SoniaGandhi #Karunanidhi #Stalin
சென்னை:

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருடைய மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உங்களுடைய தந்தை கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன். அவர் உலக அரசியலில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு உயர்ந்த மனிதராக விளங்கினார். கருணாநிதி தன்னுடைய நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டார்.

மேலும் நாட்டின் மிக ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர். சிறந்த இலக்கியவாதியாக திகழ்ந்த கருணாநிதி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் கலாசாரம் மற்றும் கலைக்காகவும் பெரும் பங்காற்றி உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்துள்ளார்.

கருணாநிதியின் தலைமையில் தமிழக அரசும், அரசியலும் சிறப்பாக இருந்தது. அதற்காகவே அவர் எப்போதும் போற்றப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருக்கிறார். அவர் வழியில் நீங்கள் (மு.க.ஸ்டாலின்) பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு (கருணாநிதி) இருந்ததை நான் நம்புகிறேன். அவர் என்னிடம் எப்போதும் அன்பு, இரக்கம் மற்றும் சலுகை காட்டுபவராக இருந்தார். அவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத இழப்பு.

அவர் எனக்கு தந்தை போன்றவர். இந்த துயரமான நேரத்தில் என்னுடைய சிந்தனைகளும், பிரார்த்தனைகளும் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்காக இருக்கும். கருணாநிதி போன்ற ஒருவரை நாம் மீண்டும் பார்க்கப்போவது இல்லை. கருணாநிதியின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #SoniaGandhi #Karunanidhi #Stalin
Tags:    

Similar News