செய்திகள்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க உத்தரவு- தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர் விட்ட ஸ்டாலின்

Published On 2018-08-08 05:42 GMT   |   Update On 2018-08-08 05:42 GMT
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பைக் கேட்டதும் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனிருந்த நிர்வாகிகள் கண்ணீர்விட்டு அழுதனர். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #StalinCried
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த தீர்ப்பு குறித்த தகவல் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அவரைப் பார்த்த மற்றவர்களும் அழுது, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர்.பின்னர் அனைவரும் கண்ணீர் மல்க, தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரத்தை துரைமுருகன் மைக் மூலம் தொண்டர்களுக்கு அறிவித்தார். அதன்பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். உயிருடன் இருந்தபோதும் தொடர் வெற்றிகளைக் குவித்த கருணாநிதி, மறைந்தபிறகும் வெற்றி பெற்றிருப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.  #RIPKarunanidhi #Marina4Karunanidhi #StalinCried
Tags:    

Similar News