செய்திகள்

உப்பளம் நேதாஜி நகரில் பெண்ணை தாக்கி மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு

Published On 2018-08-06 17:39 IST   |   Update On 2018-08-06 17:39:00 IST
உப்பளம் நேதாஜி நகரில் ஆட்டோ டிரைவரின் மனைவியை தாக்கி மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் நேதாஜி நகர் அசோகன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் தனது நண்பர் கலையரசன் என்பவருடன் அன்னை இந்திரா நகர் வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அசோக் (20), விக்கி (23), தமிழ் (25) மற்றும் அப்துல்கலாம் நகரை சேர்ந்த மனோ ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் அவர்கள் செந்தில் குமாரை தாக்க பாய்ந்தனர். அப்போது அவர்களை கலையரசன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதையடுத்து செந்தில் குமார் தனது வீட்டுக்கு வந்து விட்டார். ஆனாலும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் இரவு செந்தில்குமார் வீட்டுக்கு வந்தது.

விபரீதம் நடக்க போவதை உணர்ந்து கொண்ட செந்தில் குமாரின் மனைவி ரோஸ்மேரி (22) கணவரை வீட்டின் உள்ளே பூட்டி வைத்து விட்டு அந்த கும்பலிடம் விசாரித்தார். ஆனால், அந்த கும்பல் செந்தில்குமாரை வீட்டில் இருந்து வெளியே அனுப்புமாறு மிரட்டியது. ஆனால், ரோஸ்மேரி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ரோஸ்மேரியை தாக்கியது. இதனை தடுக்க முயன்ற அவரது தந்தையையும் தாக்கிய அந்த கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவேஅந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து அசோக் உள்ளிட்ட 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News