செய்திகள்

திருப்பத்தூரில் மனைவியை கொன்ற எலக்ட்ரிசீயன் கைது

Published On 2018-08-06 09:58 GMT   |   Update On 2018-08-06 09:58 GMT
திருப்பத்தூரில் கத்தியால் மனைவியின் கழுத்தை கணவனே அறுத்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை பெருமாள் கோவில் அருகில் உள்ள டி.எம்.சுலைமான் தெருவைச் சேர்ந்தவர் அல்டாப். இவருக்கும், திருப்பத்தூர் ஆரீப் தெருவைச் சேர்ந்த நஷீமா (வயது 22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவர்கள் தற்போது திருப்பத்தூரில் அப்பாஸ் என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

திருமணமான நாள்முதலே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இளம்பெண் நஷீமாவுக்கு திருமணத்தின்போது, பெற்றோர் அணிவித்த நகைகளை அல்டாப் வாங்கி, அதனை விற்று ஊதாரித்தனமாக செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக அல்டாப் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே கடையை மூடிவிட்டு 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்றுவிட்டார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சென்னையில் இருந்து அவ்வப்போது திருப்பத்தூருக்கு வந்து மனைவி, குழந்தைகளுடன் தங்கிவிட்டு செல்வார்.

நஷீமாவிடம் மேலும் தாயார் வீட்டில் இருந்து நகை வாங்கி வரும்படி கேட்டு வந்தார். அது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று இரவு 9.30 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அல்டாப், மனைவியை அடித்து உதைத்து, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை சரமாரியாக அறுத்துக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நஷீமாவை வெறித்தனமாக கொலை செய்த தகவலை, அல்டாப் தனது செல்போன் மூலமாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும், சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நஷீமாவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய அல்டாப்பை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News