செய்திகள்

ஈரானில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

Published On 2018-08-04 22:10 GMT   |   Update On 2018-08-04 22:30 GMT
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TamilmaduFishermen
ஆலந்தூர்:

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் தொழில் செய்ய தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், ஆரோக்கியராஜ், சகாய மைக்கேல் பார்த்திபன், ஜோசப், சேவியர் ஜெபமாலை, சூசை, சேவியர், ஜேசுதாசன், திருநெல்வேலியை சேர்ந்த செல்வகஸ்பர், விஜய், ஜேசுஇக்னேடிஸ், மார்க்வார்க், அந்தோணி மைக்கேல், அந்தோணி ராயப்பன், மரியஜோசப் கென்னடி, தூத்துக்குடியை சேர்ந்த பெனிடோ, சேவியர், சுஜய்பெர்ணான்டஸ், விக்டர், பிரசாந்த், அஜிடன் ஆகிய 21 மீனவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.

இவர்கள், வேலைக்கான விசாவில் இல்லாமல் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானார் கள். இவர்களை பணிக்கு அமர்த்தியவர்களும் உரிய சம்பளம், உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

இதுபற்றி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆண்டனிக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர் மத்திய மந்திரிகள் சுஷ்மாசுவராஜ், பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும் இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினார்.

அதைதொடர்ந்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர்.

அவர்களை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள், உணவு சாப்பிட தமிழக அரசின் சார்பில் 21 பேருக்கும் தலா ரூ.500 வழங்கப்பட்டது.

முன்னதாக கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரானில் தவித்த எங்களை மீட்டுவர நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கும், எங்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து எங்களிடம் இருந்த மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்று அந்த பணத்தில்தான் ஈரான் சென்றோம்.

ஆனால் கடந்த 7 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாங்கள் மீண்டும் தொழில் செய்ய எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilmaduFishermen
Tags:    

Similar News