செய்திகள்

ராசிபுரத்தில் தமாகா ஆர்ப்பாட்டம்

Published On 2018-08-03 09:13 GMT   |   Update On 2018-08-03 09:13 GMT
ராசிபுரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராசிபுரம்:

பாலியல் அத்துமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும், ராசிபுரம் நகரத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும், ராசிபுரத்தில் உள்ள அரசு மதுபான கடைகளின் பார்களில் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராசிபுரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படாமலும், ஏர் ஹாரன் அடிக்கப்படாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், தேர்தல் முறையீட்டுக்குழு உறுப்பினர் வக்கீல் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வக்கீல் ஆர்.டி.இளங்கோ தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் செங்காட்டு கணேசன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அருள், மாவட்ட பொதுச் செயலாளர் பழனிசாமி, நாமகிரிபேட்டை வட்டார தலைவர் பெரியசாமி, நாமகிரிபேட்டை துணை தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Tags:    

Similar News