செய்திகள்

ஜனநாயக நாடா? போலீஸ் நாடா?- ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

Published On 2018-07-31 07:26 GMT   |   Update On 2018-07-31 07:26 GMT
வக்கீல் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்த வழக்கில் தமிழகம் ஜனநாயக நாடா? போலீஸ் நாடா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி கலெக்டர் நாளை கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். #SterliteProtest
மதுரை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்ய தேடியபோது மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி காவலில் வைக்கப்பட்ட வக்கீல் ஹரிராகவன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த 24-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது சட்டவிரோதமானது, அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.பி.செல்வம், பசீர்அகமது முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி வாதாடினார்.


அவர் வாதாடுகையில், மனுதாரரின் கணவருக்கு ஸ்டெர்லைட் வழக்கில் ஜாமீன் வழங்கி 24-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 26-ந்தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் வழக்கில் இதுவரை 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது ஜனநாயக நாடா? போலீசாரின் அதிகாரத்திற்குட்பட்ட சர்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #ThoothukudiIncident #HighCourt #SterliteProtest
Tags:    

Similar News