செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

Published On 2018-07-31 03:25 GMT   |   Update On 2018-07-31 03:25 GMT
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். #TNLocalBodyElection #TamilNaduCivicPolls

Tags:    

Similar News