செய்திகள்

நீர் திறப்பால் விவசாயிகள் உற்சாகம் - 20 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு

Published On 2018-07-30 13:45 GMT   |   Update On 2018-07-30 13:45 GMT
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரை வைத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து பாசன பகுதியில் வேளாண் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் 25 ஆயிரத்து 500 ஏக்கரும், காளிங்கராயன் பாசனப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரும் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

நடப்பாண்டு மழைப் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளது. பவானி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1,650 கன அடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுடி பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இது பற்றி வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

நடப்பாண்டில் மாவட்ட அளவில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதியில் 5 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இது தவிர வாழை, ஆயிரம் ஹெக்டேர், கரும்பு 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். கீழ் பவானி பாசனப் பகுதியில் மீதமுள்ள 14 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடியாகும்.

இயந்திர முறை நெல் நடவால் நேரம், செலவு, வேலையாட்கள் குறைவு நன்மைகள் உள்ளன. சாதாரண நாற்றங்கால் முறையில் 30 நாட்களுக்கு பின் வயலில் நடவு பணி செய்ய வேண்டும். பாய் முறை நாற்றங்காலால் 15 நாளில் நடவு செய்யலாம்.

இதன் மூலம் அறுவடை காலம் 15 நாட்கள் குறையும். 5 முதல் 10 சதவீத மகசூல் அதிகரிக்கும். சாதாரண நடவில் ஹெக்டேருக்கு 7 டன் மகசூல் கிடைத்தால், இயந்திர நடவில் கூடுதலாக 1 டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News