செய்திகள்

டாஸ்மாக் மது பார்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை

Published On 2018-07-30 09:29 GMT   |   Update On 2018-07-30 09:29 GMT
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #Tasmac #plasticban
சென்னை:

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இப்போதே ஒரு சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருவதால் அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

பார் உரிமையாளர்களை அழைத்து டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காகிதங்கள் அல்லது கண்ணாடி டம்ளர் போன்றவற்றை பயன்படுத்துமாறு எடுத்துரைத்துள்ளனர். அதனால் வருகிற 1-ந்தேதி முதல் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக அனைத்து மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. #Tasmac #plasticban

Tags:    

Similar News