செய்திகள்

நீண்டதூரம் செல்லக்கூடிய பகுதிகளுக்கு கட் சர்வீஸ் பஸ்கள் கூடுதலாக இயக்குவதால் பயணிகள் அவதி

Published On 2018-07-30 09:13 GMT   |   Update On 2018-07-30 09:13 GMT
நீண்டதூரம் செல்லக்கூடிய பகுதிகளுக்கு கட் சர்வீஸ் பஸ்கள் கூடுதலாக இயக்குவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். #TNtransport

சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து கழக பஸ்கள் 83 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தினமும் 3100 பஸ்கள் சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன.

நகர பேருந்துகள் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை மாநகர பஸ்கள் 40 கிலோ மீட்டர் தூரமுள்ள நீண்ட தூர பகுதிகளுக்கும் சென்று வருகிறது.

பஸ் கட்டணம் உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. பஸ் பயணிகள் மின்சார ரெயில்களுக்கும், ஷேர் ஆட்டோவுக்கும் மாறியதால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு வழித் தடங்களில் நீண்ட தூரத்திற்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களாக நீண்ட தூரம் இயக்கப்பட்ட பஸ்கள் ‘கட்சர்வீஸ்’ பஸ்களாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தியாகராயநகர்- தாம்பரம் கிழக்கு இடையே இயக்கப்பட்ட ‘5ஏ’ மாநகர பஸ் தி.நகர்-மடிப்பாக்கம் வரை கட்சர்வீஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல அடையார்- தாம்பரம் மேற்கு வரை சென்ற 99 வழித்தட பஸ் தூரம் குறைக்கப்பட்டு அடையார்- சோழிங்கநல்லூர், சோழிங்க நல்லூர்- தாம்பரம் மேற்கு இடையே கட்சர்வீசாக மாற்றம் செய்து இயக்கப்படுகிறது.

இதுபோல மேலும் பல வழித்தடங்களில் கட் சர்வீஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரே பஸ்சில் சென்று வந்த பயணிகள் கட்சர்வீஸ் அதிகரிப்பினால் 2 பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது.

கட்சர்வீஸ் மூலம் 2 டிக்கெட் பெற்று பயணம் செய்ய வேண்டும். இதனால் கட்டணம் அதிகரித்துள்ளது என்று பயணிகள் புலம்புகின்றனர்.

தியாகராயநகரில் இருந்து தாம்பரம் கிழக்கிற்கு டீலக்ஸ் பஸ்சில் செல்ல டிக்கெட் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்சர்வீஸ் பஸ் விடப்பட்டதால் 2 பஸ்களில் ஏறி பயணம் செய்வதன் மூலம் ரூ.48 செலவாகிறது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல ஏ51 தாம்பரம் கிழக்கு- ஐகோர்ட்டு, வி51 தி.நகர்-தாம்பரம் மேற்கு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் வேளச்சேரி- தாம்பரம் இடையே கட்சர்வீசாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் அதிகமானதோடு நேரமும் அதிகரிக்கிறது என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு கட் சர்வீஸ் வருவாய் அடிப்படையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்கு பரீட்சார்த்த அடிப்படையில் ‘கட்சர்வீஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றனர். #TNtransport

Tags:    

Similar News