செய்திகள்

திருவோணம் அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஆற்றில் குதித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2018-07-26 10:17 GMT   |   Update On 2018-07-26 10:17 GMT
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாணவர்கள் ஆற்றில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே பணி கொண்டான் விடுதி பகுதியில் கடந்த 9-ந்தேதி எந்த முன்அறிவிப்பும் இன்றி 2 டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் இந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒருவாரத்தில் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று கூறினர். இதனால் அப்பகுதியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று வரை அதிகாரிகள் கூறியது படி ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் மற்றும் மாவட்ட கலால் உதவி ஆணையர் தவசீலன் மற்றும் போலீசார் இப்பகுதி மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை பணி கொண்டான் விடுதி மக்கள் புறக்கணித்தனர்.

இதைத் தொடர்ந்து மற்ற பகுதி மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் ஒரு கடையை தற்போது அகற்றிவிடுவோம். மற்றொரு கடையை இன்னும் 10 நாட்களில் அகற்றுவோம் என்று கூறினர்.

இதனை ஏற்று கொள்ளாத மக்கள் கலெக்டர் கையெழுத்து உள்ள ஆணையை காட்டினால் மட்டுமே நாங்கள் இதற்கு ஆதரவு தருவோம். நீங்கள் இப்போது கூறிவிட்டு மீண்டும் கடைக்கு அனுமதி கொடுத்து விடுவீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சுமார் 200 மாணவ- மாணவிகள் உள்பட மற்றும் கிராம மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கந்தர்வக் கோட்டை - பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ், ஏ.டி.எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலகண்ணன், கலால் உதவி ஆணையர் தவசீலன் ,இன்ஸ்பெக்டர்கள் ஒரத்த நாடு மணிவண்ணன், அதிராம் பட்டினம் தியாகராஜன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.

அப்போது கலால் உதவி ஆணையர் தவசீலன் பேசும் போது,‘‘ 2 டாஸ்மாக் கடைகளையும் தற்போது அகற்ற முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

அந்த சமயத்தில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட மாணவர்களை கலைந்து பள்ளிக்கு செல்லுமாறு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறினார். ஆனால் மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

இதனால் பொறுமையிழந்த இன்ஸ்பெக்டர் தியாகராஜன், திடீரென ஆற்று பாலத்தில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமார், செல்வகணேஷ் உள்பட 4 மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.

அப்போது போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் திடீரென 4 மாணவர்களும் ஆற்றில் குதித்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால்4 மாணவர்களும் ஆற்றில் தத்தளித்தப்படி நீந்தினர். ஆனால் அவர்களால் கரை ஏறமுடியவில்லை. அப்போதும் ‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம்’ என்று கோ‌ஷமிட்டனர்.

இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு நின்ற விவசாயிகள் சிலர் , தங்களது துண்டுகளை கயிறு போல் கட்டி வீசி ஆற்றில் தத்தளித்த மாணவர்களை மீட்டனர். பிறகு 4 மாணவர்களும் கரை சேர்ந்தனர்.

சுமார் அரைமணி நேரமாக மாணவர்கள் ஆற்றில் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News