செய்திகள்
களியக்காவிளை போலீஸ்நிலையத்தை அனீஷ் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்

போலீஸ் விசாரணையில் மர்ம மரணம்: குமரி வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Published On 2018-07-26 09:57 GMT   |   Update On 2018-07-26 09:57 GMT
குமரி வாலிபரை போலீஸ் விசாரணையில் கொன்று விட்டதாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை:

குமரி மாவட்டம் களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் அனீஷ் (வயது 20). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

கடந்த 23-ந் தேதி கேரள மதுவிலக்கு போலீசார் களியக்காவிளை வந்து ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அனீசை அழைத்து சென்றனர். அதன்பிறகு அனீசை அவர்கள் எங்கு வைத்து விசாரித்தார்கள், அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர்.

இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று அனீசின் உறவினர்களுக்கு கேரள போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அனீசுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

உடனே உறவினர்கள் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அனீஸ் இறந்து பிணமாக கிடந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் களியக்காவிளையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விசாரணைக்காக அழைத்துச் சென்ற கேரள போலீசார் தாக்கியதில் தான் அனீஷ் இறந்திருக்க வேண்டும், எனவே அனீசை அழைத்துச் சென்ற கேரள போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் அனீசை களியக்காவிளை பகுதியில் இருந்து கேரள போலீசார் அழைத்து சென்றுள்ளனர். எனவே இங்குள்ள போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவும் கொடுத்தனர். அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொண்டு உறவினர்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மர்மமான முறையில் இறந்த அனீசின் உடல் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. 2-வது நாளாக அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். அனீஷ் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே விசாரணைக்காக அழைத்துச் சென்ற அனீசுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அனீசின் உறவினர்கள் போலீசார் கூறும் காரணத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே திருவனந்தபுரத்தில் 2005-ல் விசாரணை கைதியை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதேநாளில் களியக்காவிளை வாலிபர், கேரளாவில் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #taimlnews
Tags:    

Similar News