செய்திகள்

கண்டக்டர் இல்லாத அரசு பஸ்களில் கட்டணம் அதிகரிப்பு

Published On 2018-07-18 10:20 IST   |   Update On 2018-07-18 10:20:00 IST
சென்னையில் இருந்து வேலூர் செல்ல கண்டக்டர் இல்லாத பஸ்களில் கூடுதலாக ரூ.39 செலுத்த வேண்டி உள்ளது. #BusConductor #TNTransport

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சமீபத்தில் கண்டக்டர் இல்லாத நீண்ட தூரம் செல்லும் பஸ்களை அறிமுகப்படுத்தியது.

இந்த பஸ்சில் கண்டக்டர் உடன் செல்லமாட்டார். பஸ் புறப்படும் இடத்திலேயே பயணிக்கு டிக்கெட் கொடுத்து முடித்துவிடுவார். பஸ் புறப்பட்ட பின்பு இடையில் எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றாமலும், இறக்காமலும் பஸ் போய்ச்சேர வேண்டிய இடத்தில் தான் நிற்கும்.

சேலம், கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் நீண்ட தூர பஸ்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து வேலூருக்கு கண்டக்டர் இல்லாத பஸ்கள் விடப்பட்டுள்ளது.

நிண்டதூரம் செல்லும் இந்த பஸ் இடையில் எங்கும் நிற்காமல் செல்வதால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதாக பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இதில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் செய்தனர்.

சென்னையில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் 34 பஸ்கள் கண்டக்டர் இல்லாத பஸ்சாக இயக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் பிரிவில் இந்த பஸ்கள் இயக்கப்படுவதால் சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பஸ்களில் கி.மீட்டருக்கு கட்டணம் 58 பைசா. ஆனால் கண்டக்டர் இல்லாத பஸ்களில் கட்டணம் கி.மீட்டருக்கு 85 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூடுதலாக கி.மீட்டருக்கு 27 பைசா செலுத்த வேண்டும்.

சென்னையில் இருந்து வேலூர் செல்ல கண்டக்டர் இல்லாத பஸ்களில் மொத்தம் ரூ.128 வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.89 மட்டுமே. கண்டக்டர் இல்லாத பஸ்களில் கூடுதலாக ரூ.39 செலுத்த வேண்டி உள்ளது.

சென்னையில் இருந்து வேலூருக்கு ஒரு குடும்பத்தில் 4 பேர் பயணம் செய்தால் கூடுதலாக ரூ.156 செலவாகிறது. எனவே குடும்பத்தோடு பயணம் செய்பவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.#BusConductor #TNTransport

Tags:    

Similar News