செய்திகள்

கண்ணமங்கலத்தில் ரூ.2 கோடி ஐம்பொன் சிலை கடத்தல்: ஆற்றில் புதைத்து வைத்திருந்த 4 பேர் கைது

Published On 2018-07-15 16:18 GMT   |   Update On 2018-07-15 16:18 GMT
கண்ணமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சாமி சிலையை கடத்திய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சசிக்குமார் நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மகன் கோகுலன் (வயது 29). இவருடைய வீட்டில் ஐம்பொன் சிலையை கடத்தி பதுக்கி வைத்திருப்பதாகவும், அதனை விலைக்கு வாங்க பல லட்சத்துடன் கார்களில் அடையாளம் தெரியாத டிப்-டாப் ஆசாமிகள் வந்து செல்வதாக கிராம நிர்வாக அலுவலர் முனிவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுப்பற்றி, கண்ணமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று கோகுலன் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். வீட்டில் ஐம்பொன் சிலைகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, கோகுலனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

வீட்டின் அருகே செல்லும் நாகநதி ஆற்றுப்படுகையில் பள்ளம் தோண்டி ஐம்பொன் சிலையை புதைத்து பதுக்கி இருப்பதாக தெரிவித்தார். சிலையை புதைத்த இடத்தை கோகுலன் காட்ட, போலீசார் பள்ளம் தோண்டி ஐம்பொன் சாமியை சிலை மீட்டனர்.

அந்த ஐம்பொன் சிலை, ரூ.2 கோடி மதிப்புடைய புவனேஸ்வரிம்மன் சிலை என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிலையை கைப்பற்றி கோகுலனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து ஐம்பொன் சாமி சிலையை கடத்தி விற்க முயன்றதாக கோகுலன் வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து, கோகுலனை கைது செய்த போலீசார், சிலை கடத்தலில் தொடர்புடைய கோகுலனின் நண்பர்களான கண்ணமங்கலத்தை அரிராஜன் (26), நாகநதியை சேர்ந்த திருமலை (27), அடுக்கம்பாறை இ.பி. காலனியை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணமங்கலம் அடுத்த கீழ் வல்லத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் களம்பூரான் குட்டையை சேர்ந்த சிலம்பு ஆகிய 2 பேரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும், ஐம்பொன் சாமி சிலையை எந்த கோவிலில் இருந்து கொள்ளையடித்து கடத்தி வந்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? ஐம்பொன் சிலையை வாங்க முயற்சித்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News