செய்திகள்

கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டை காக்க முடியும்- இல.கணேசன்

Published On 2018-07-15 02:35 GMT   |   Update On 2018-07-15 02:35 GMT
‘கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டை காக்க முடியும்’ என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சென்னை:

பொற்றாமரை கலை-இலக்கிய அரங்கத்தின் 14-வது ஆண்டு தொடக்க விழா சென்னை, தியாகராயநகரில் நேற்று நடந்தது. விழாவுக்கு பொற்றாமரை தலைவரும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தலைமை தாங்கினார். சின்மயா மிஷன் பூஜ்யசுவாமி மித்ரானந்தா ஆசியுரை வழங்கினார்.

விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோருக்கு ‘நல்ல புரவலர்கள்’, பிரேமா நந்தகுமார், சுகி சிவம் ஆகியோருக்கு ‘நல்லறிஞர்கள்’, பின்னணி பாடகி வாணி ஜெயராம், சி.வி.சந்திரமோகன் ஆகியோருக்கு ‘நற்கலைஞர்கள்’ என்னும் கவுரவத்துடன் இந்த ஆண்டுக்கான ‘பொற்றாமரை விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கே.பாண்டியராஜன், இல.கணேசன் இருவரும் இணைந்து விருதுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வாணிஜெயராம் கலந்துகொள்ள இயலாததால் அவருக்கு பதிலாக வக்கீல் சுமதி விருதை பெற்றுக்கொண்டார்.

விழாவில் இல.கணேசன் பேசியதாவது:-


இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள நமது நாட்டின் அடித்தளமாக அமைந்துள்ள பாரம்பரிய பண்பாட்டின் வெளிப்பாடாக விளங்குபவை கலை, இலக்கியங்கள்.

எனவே கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டினைக் காக்க முடியும். இதனை முன்னெடுத்து செல்பவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைப்பதற்காக பொற்றாமரை அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் நம் நாட்டின் மீது பூசப்படும் சாம்பலும் விலகிவிடும்.

இலக்கியம், கலை, பண்பாடு போன்றவை வளர்ந்தால் ஒரு சமுதாயம் தானாகவே வளர்ச்சி கண்டுவிடும். இதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்தான் பொற்றாமரை. கடந்த 13 ஆண்டுகளாக மாதம் ஒரு கூட்டம் நடத்தி அதில் நம்முடைய மொழி, கலாசாரம், பண்பாடு, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்து 14-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நல்ல புரவலர்கள், நல்லறிஞர்கள், நற்கலைஞர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சுதா சேஷய்யன் பேசினார். உன்னிகிருஷ்ணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. தேசிய சிந்தனையுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News