செய்திகள்

காஞ்சீபுரத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடிய 6 பேர் கைது

Published On 2018-07-14 07:03 GMT   |   Update On 2018-07-14 07:03 GMT
காஞ்சீபுரத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Greenwayroad

காஞ்சீபுரம்:

பசுமை வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்தது.

காஞ்சீபுரம் அடுத்த மணல்மேடு பகுதியில் நேற்று நிலம் அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வந்தனர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நேரு, மற்றும் நிர்வாகிகள் மோகனன், சங்கர், கனகராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திர சேகரன் ஒருமையில் பேசுவதாகவும் நில எடுப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவில் போலீசாரை குவித்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களை அடைத்து வைத்திருந்த மாகரல் காவல் நிலையத்தினை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். #Greenwayroad

Tags:    

Similar News