செய்திகள்

நிர்மலாதேவி வழக்கில் 1160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2018-07-13 05:37 GMT   |   Update On 2018-07-13 09:48 GMT
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாக்கல் செய்தனர்
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு, விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு கெடு விதித்தது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வந்த காட்சி.

இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் தன்மை குறித்து முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. #NirmalaDevi #NirmalaDeviCase
Tags:    

Similar News