செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும்- நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பேடி பதிலடி

Published On 2018-07-10 11:11 IST   |   Update On 2018-07-10 11:11:00 IST
தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்று நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

டெல்லி மாநில அரசில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

அதில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது.

புதுவையிலும் கவர்னருக்கு அதிகாரமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு அதிகாரமா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் டெல்லி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது புதுவைக்கு பொருந்தும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்த தீர்ப்பை மீறி கவர்னர் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி கூறும் போது, டெல்லி மாநில சம்பந்தமாக அளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது, இதை சுப்ரீம் கோர்ட்டே சுட்டிக்காட்டி இருக்கிறது என்று கூறினார்.


இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் -அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அது புதுவைக்கு பொருந்தும். மேலும் அரசியல் சாசன பெஞ்ச் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது என்று கூறினார்.

இதனால் இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது,

எனக்கு (கவர்னர்) அதிகாரம் இல்லை என சொல்பவர்கள் சுப்ரீம் கோட்டு தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். அதில் கவர்னருக்குள்ள அதிகாரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். #Kiranbedi
Tags:    

Similar News