செய்திகள்

பாசனத்திற்காக கோதையாறு 30 நாட்களுக்கு திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-07-07 07:56 GMT   |   Update On 2018-07-07 07:56 GMT
பாசனத்திற்காக கோதையாறு அணையிலிருந்து வரும் 9-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்கு ராதாபுரம் கால்வாய்க்கு 9.7.2018 முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
Tags:    

Similar News